உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் இந்தியா?

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் இந்தியா?

editor 2

குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவது உண்மையாயின் குண்டுத்தாக்குதலை நடத்த இந்தியாவுக்கு உதவி செய்தது யார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.

மைத்திரிபால சிறிசேனவை எவரோவொருவர் இயக்குகிறார் என்பதை அறிய முடிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (1) இடம்பெற்ற ஆயுர்வேத சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பாரதூரமானவை. குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக இவர் குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது.

முன்னாள் ஜனாதிபதியின் கருத்துக்கு அமைய  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக இருந்தால். இந்தியாவுக்கு  உதவி செய்தது யார் என்பதையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.மைத்திரிபால சிறிசேனவை எவரோவொருவர் இயக்குவது தெளிவாக தெரிகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்  சம்பவம்  தொடர்பான விசாரணைகளை ஸ்கொட்லன்ட் யாட்  பொலிஸுக்கு  பொறுப்பாகுவதாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகுவற்கு முன்னர் குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதியானதன் பின்னர் ஸ்கொட்லன்ட் யாட் விவகாரத்தை அவர் மறந்து விட்டார்.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எதிரணியின் பக்கம் இருக்கும் போது குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முதலைக் கண்ணீர் வடித்தார்.

பாராளுமன்றத்துக்கு கறுப்பு சால்வையுடன் வருகை தந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.ஆளும் தரப்புக்கு சென்று அமைச்சு பதவியேற்றதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை மறந்து விட்டார்.

குண்டுத்தாக்குதல் தொடர்பில்  முறையான விசாரணைகளை மேற்கொண்டு பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவது தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.

மக்கள் வைராக்கியத்துடன் உள்ளார்கள்.சட்டத்தின் ஊடாக தண்டனை கிடைக்காவிடின் மக்கள்  தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

Share This Article