பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்கிறது ஐ.தே.க!

பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்கிறது ஐ.தே.க!

editor 2

நாட்டின் தற்போதைய நிலையில் பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. அவ்வாறான நிலை ஏற்பட்டால் நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதுடன் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும். அதனால் ஆரம்பாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே பொருத்தமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரி மஹாநாயக்க தேரர்களிடம் வெள்ளிக்கிழமை (29) ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் காலப்பகுதிக்குள் நடத்த வேண்டும். அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். என்றாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் பொதுத தேர்தல் இடம்பெற்றால் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. 

அவ்வாறான நிலை ஏற்பட்டால் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துவரும் அனைத்து வேலைத்திட்டங்களும் தடைப்படும். நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீண்டும் பின்தள்ளப்படும். அதனால் ஆரம்பமாக ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக அதில் வெற்றிபெறுவார். அதன் பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு சென்றால் நிலையான ஆட்சி ஒன்றை நாட்டில் ஏற்படுத்தலாம்.

மேலும் ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் பிரதமராக இருந்தே குறுகிய அதிகாரங்களுடன் நாட்டின் அபிவிருத்திக்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்தார். ஆனால் தற்போது நாடு வங்குராேத்து அடைந்திருந்த சந்தர்ப்பத்தில் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பல வேலைத்திட்டங்களை அவருக்கு செய்ய முடியுமாகி இருந்தது. அதனாலே குறுகிய காலத்தில் நாட்டை வங்குராேத்து நிலையில் இருந்து மீட்டு, மக்கள் தங்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்தார்.

Share This Article