ஞானசார தேரர் வைத்தியசாலையில்!

ஞானசார தேரர் வைத்தியசாலையில்!

editor 2

4 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று 4 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அத்துடன் ஒரு இலட்சம் ரூபாயை அபராதமாக செலுத்துமாறும், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதிகே தீர்ப்பளித்தார்.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதியும், அதே ஆண்டின் டிசம்பர் மாதம் முதலாம் திகதியும், கூரகலை விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இது நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தனர்.

இதனையடுத்து, ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றவியல் சட்டத்தின் 295 சரத்தின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றில் இரண்டு குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், 8 வருடங்களாக குறித்த வழக்கு தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு குறித்த இரண்டு வழக்குகளிலும் தலா 2 ஆண்டுகள் என்ற அடிப்படையில் 4 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This Article