1987 தொடக்கம் 1989 வரையான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற ஜே. வி. பி. கிளர்ச்சிக்காக
மன்னிப்பு கோரினார் ஜே. வி. பியின் தலைவரும் இன்றைய தேசிய மக்கள் சக்தியின் தலைவரு
மான அநுரகுமார திஸநாயக்க.
கனடா சென்றுள்ள அநுரகுமார ரொறன்ரோவில் நடந்த கூட்டத்திலேயே மன்னிப்பைக்கோரினார்.
இதன்போது, வன் முறைக்கு வழிவகுத்த சூழ்நிலை காணப்பட்டதாகவும் எது எப்படி இருந்தாலும் ஜே. வி. பி. கடந்த கால செயல்களிலிருந்து விலகி தற்போது அரசியல் கட்சியாக முன்னேற்
றம் அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜனதா விமுக்தி பெரமுன (ஜே. வி. பி- மக்கள் விடுதலை முன்னணி) மார்க்சிஸ் சிந்தனைகளை கொண்ட ஆயுதம் ஏந்திய அமைப்பாகும்.
1987 ஏப்ரல் தொடக்கம் 1989 டிசெம்பர் வரையான காலப்பகுதியில் ஆட்சியை பிடிப்பதற்காக இரண்டாவது முறையாக ஆயுதக் கிளரச்சியில் ஈடுபட்டது. முன்னதாக, 1971ஆம் ஆண்டிலும் கிளரச்சியில் ஈடுபட்டு தோல்வியடைந்தது. இந்தக் கிளர்ச்சி யின்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அந்த அமைப்பு கொன்றது.
இரண்டாவது கிளர்ச்சிக் காலமான 1987 – 1989இல் இராணுவத்தினர், பொலிஸார், பொதுமக்கள் என 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஜே.வி. பி. கொன்றது. இதைத் தொடர்ந்து 13 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் வரையான அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஆதரவாளர்களை அரசாங்கம் கொன்று அந்த அமைப்பை தடை செய்திருந்தது.
இதேநேரம், 1983 தமிழ் மக்களுக்கு எதிராக தென்னிலங்கையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரத்தின் பின்னணியிலும் ஜே. வி. பியினர் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.