இலங்கை – இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பாக இந்த வாரம் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதற்காக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க நாளை மறுதினம் புதுடில்லி செல்கிறார்.
அங்கு, இரு நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கும் சாகல ரத்நாயக்க இந்தியாவின் முக்கிய தலைவர்களுடன் பாலம் தொடர்பில் பேச்சு நடத்துவார் என்று கூறப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய இந்திய பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுக்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் தலை மன்னாரிலிருந்து, இந்தியாவின் இராமேஸ்வரம் வரையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளது. வாகனப் போக்குவரத்துக்கு மாத்திரமன்றி, இரு வழிப் புகையிரத பாதையும் அமைக்கப்பட வுள்ளது.
இதேவேளை, இலங்கை – இந்தியா உத்தேச பாலத்தின் ஊடான நில இணைப்பை மையப்படுத்தி தலைமன்னார் தொடக்கம் திருகோணமலை ஊடாக கொழும்பு வரையிலான விசேட நேரடி நெடுஞ்சாலை போக்குவரத்து கட்டமைப்பும் உருவாக்கப்படவுள்ளது.
இதன் முதல் கட்டமாக தலைமன்னாரி லிருந்து திருகோணமலை துறைமுகம் வரையிலான வீதி கட்டமைப்பு உரு வாக்கப்படவுள்ளது.
இந்த பாலம் ஊடாக இரு நாட்டு பொருளாதார மேம்பாடு மற்றும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்த முடியும் என்று இரு தரப்பும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த பாலத்தை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வு நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.