சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(21) நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இதில், சபாநாயகருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி, சபாநாயகருக்கெதிரான அவநம்பிக்கை பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு முரணாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபனையை சபாநாயகர் புறக்கணித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அத்துடன், ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறித்த சரத்துகளை நிறைவேற்ற, சபாநாயகர் இடமளித்ததாக குற்றஞ்சாட்டி ஐக்கிய மக்கள் சக்தி இந்த அவநம்பிக்கை பிரேரணையை முன்வைத்ததுடன், அதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்குவதாக உறுதியளித்திருந்தன.
முன்னதாக குறித்த பிரேரணையை இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட போதிலும் அது மூன்று நாட்களாக நீடிக்கப்பட்டது.