வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக்கட்சி தீர்மானம்!

வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக்கட்சி தீர்மானம்!

editor 2

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு
எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக்கோருவது என்றும், நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக் கைவாங்க அவர்கள் இணங்காவிட்டால், தொடர்ந்து வழக்குகளை எதிர்கொள்வது என்றும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் கூடி முடிவெடுத்தனர்.

கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே.வி.தவராசா, புவிதரன், சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா,
சிறிஸ்கந்தராஜா ஆகியோரை கொண்ட குழுவின் ஊடாக கையாள்வதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூடி முடிவு செய்துள்ளது.

கிளிநொச்சியில் நேற்று மத்திய குழு உறுப்பினர்கள் சுமார் 32 பேர் வரையில் கூடி நடத்திய கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

முஸ்லிம் சுயேச்சைக் குழு சார்பில் கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட முயன்ற பீற்றர் இளஞ் செழியன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மற்றொருவர் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பீற்றர் இளஞ்செழியன் சார்பில் சட்டத்தரணி குருபரன் முன்னிலையாகியுள்ளார். இந்த வழக்கு அடுத்த தவணையில் முடிவடையவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது.

வழக்கை வாபஸ் பெறுவதெனில் சர்ச்சைக்குரிய மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நிர்வாகிகள் தெரிவை அங்கீகரிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கேட்டு வருகிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியின் புதிய தலைவர் சிறிதரனை நேரில் சந்தித்து இந்த விடயத்தை பேசியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

கொழும்புக்கிளை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட தரப்பினரும் இதே சமரச பேச்சை தொடர்ந்துள்ளனர்.

நேற்றைய மத்தியகுழு உறுப்பினர்களின் கலந்துரையாடலில் வைத்தியர் பா.சத்தியலிங்கமும் இதே கருத்தை முன்வைத்தார்.

என்றாலும், இந்த கோரிக்கைகளை கட்சியின் புதிய தலைவர் சிறிதரன் ஒரேயடியாக நிராகரித்தார். வழக்கை வாபஸ் பெறுவதெனில், நிபந்தனையற்ற விதமாக வழக்கை வாபஸ் பெற வேண்டு மென குறிப்பிட்டார். அதை பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரித்தனர்.

கட்சிக்கு எதிரான வழக்குகளில் 7 பிரமுகர்களின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ள நிலையில், அனைவரும் ஒத்த கருத்தாக ஒரே சட்டத்தரணிகள் குழு வின் மூலம் வழக்கை சந்திக்க வேண்டு மென குறிப்பிடப்பட்டது. இதன்போது குலநாயகம், எமது கட்சியிலும் இரண்டு சட்டத்தரணிகள் உள்ளனர்- சுமந்திரன், சயந்தன்- அவர்களையும் இணைத்து வழக்கை சந்திக்க வேண்டுமென்றார்.

இந்த கருத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. சுமந்திரன் இலங்கையில் இல்லாததால் நேற்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர் தவிர்ந்த ஏனையவர்கள் தவராசா, புவிதரன், சிறிகாந்தா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாமின் மூலம் வழக்கை சந்திக்க முடிவு செய்தனர்.

திருகோணமலை நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில். ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரன், சட்டத்தரணி சிறிஸ்கந்தராஜா ஆகியோர் முன்னிலையாவர்.

யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையிலான குழு முன்னிலையாகும்.

வழக்கு தொடர்ந்தவர்கள் நிபந்தனையற்ற விதமாக வழக்கை வாபஸ் பெறாவிட்டால், நீதிமன்றத்தில் யாப்பு விதிகளை மீறிய தவறை ஏற்றுக்கொண்டு, புதிதாக தெரிவை மேற்கொள்வோம் என சிறிதரன் குறிப்பிட்டார்.

Share This Article