இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன இடையே தற்போது இழுபறிநிலை ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.
இவர்கள் இருவரின் இணைத்தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், கூட்டணியை உருவாக்குவதற்கான உடன்படிக்கை தொடர்பிலேயே இழுபறி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, இந்தப் புதிய அரசியல் கூட்டணி சார்பிலான ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பான பிரச்னை தீர்க்கப்படாதமையே இதற்கான காரணமென அறியமுடிகின்றது.
இந்தப் புதிய கூட்டணியில், அநுர யாப்பா, நிமல் லான்சா தலைமையிலான கட்சி, நசீர் அஹமட் தலைமையிலான கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான கட்சி,
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தலைமையிலான கட்சி உட்பட மற்றும் பல கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தன.
மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் புதிய கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருந்த நிலையில், அது மேலும் தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையிலேயே, அரசாங்கத்தின் மூத்த அமைச்சரும் சட்ட வல்லுனருமான விஜேதாச ராஜபக்ஷவின் பெயரை இப்பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், பரிந்துரைத்துள்ளனர்.
ஆனால், ஜனாதிபதி பதவிக்கு மிகவும் தகுதியானவர் தானே என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் கூட்டணியை இறுதி செய்வதில்
நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன