மாகாண சபைகளுக்கு 13 ஆம் திருத்தச் சட்டம்மூலம் வழங்கப்பட்ட பொலிஸ் அதிகாரத்தை நீக்குவதற்கு 22ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் கொண்டு வந்துநிறைவேற்றவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளின் பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கு உதய கம்மன் பில முன்மொழிந்த 22 ஆம் திருத்தச் சட்ட யோசனை கடந்த செவ்வாய்க்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இது தொடர்பில் நேற்று அவர் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
அப்போது அவர் தெரிவித்தவை வருமாறு,
13ஆவது அரசமைப்பு திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மிகவும் ஆபத்தான அதிகாரங்கள் பொலிஸ் அதிகாரங்களாகும்.
எனவே, மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டும் என்பது தேசியவாதிகளின் 37 வருட கால கனவாக இருந்து வருகின்றது. இந்த கனவை நனவாக்கும் வகையில் வரலாற்றில் முதல் தடவை யாக 22 ஆவது அரசமைப்பு திருத்தம் என்ற
சட்டமூலத்தை முன்வைத்து, மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை
நீக்கியுள்ளோம்.
பெப்ரவரி 13 ஆம் திகதி (கடந்த செவ்வாய்க்கிழமை) இந்த வரைவு பிரேரணை
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதனை முன்வைக்கும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்துள்ளது.
நீதிமன்றத்தின் முன் வரைவின் அரசமைப்புத் தன்மையை சவால் செய்ய எவருக்கும் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்கள் உள்ளன. இதனை எதிர்த்து
தமிழ் பிரிவினைவாதிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவார்கள். மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் அவசியமில்லை என்பது நாட்டு மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. தமிழ் பிரிவினைவாதிகள் மாத்திரமே அதை விரும்புவதில்லை.
நாட்டில் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே யுத்தம் இடம்பெற்றது. இனியொரு யுத்தம் இடம்பெறுவதாயின் இராணுவத்துக்கும் வடக்கிலுள்ள பொலிஸாருக்கும்
இடையில் இடம்பெறும். ஆதலால் இந்தத் திருத்தம் நிறை வேற்றப்படவேண்டும். அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும்.
நாட்டை நேசிப்பவர்கள் யார், நாட்டுக்கு திரானவர்கள் யார் என்பதை மக்கள்
அறிந்துகொள்ள முடியும் – என்றார