திடீர் மரண விசாரணை அதிகாரி பற்றாக்குறையின் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து இறந்த உடல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்தோர் உடல்களை சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும், மரண விசாரணை தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் தாமத நிலை ஏற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் கூறுகின்றனர்.
திருகோணமலை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை கொண்ட பிரதேசமாகும். திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் சாதாரண சிகிச்சைகளுக்காகவும், மேலதிக சிகிச்சைகளுக்காகவும் நோயாளிகள் வருகை தருகின்றனர்.
இதனால் அங்கு பதிவாகும் மரணங்களின் வீதம் ஏனைய பிரதேசங்களை விட அதிகமாகும்.
அத்துடன், பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் ஏனைய பிரதேச வைத்தியசாலைகளில் இருந்தும் இறந்த உடல்கள் கொண்டுசெல்லப்படுகின்றன.
இந்நிலையில், ஏனைய பிரதேசங்களில் இரண்டுக்கு மேற்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், திருகோணமலைக்கு ஒரே ஒரு திடீர் மரண விசாரணை அதிகாரி மாத்திரமே நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் சுகவீனமடைந்த நிலையில் காணப்படுகிறார். இதனால் இறந்த உடல்களை பெற்றுக்கொள்வதிலும் அதற்கான ஆவணங்களை பெற்றுக்கொள்வதிலும் மக்கள் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.