வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவரை முற்படுத்த அல்லது நட்ட ஈடு வழங்க உத்தரவு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவரை முற்படுத்த அல்லது நட்ட ஈடு வழங்க உத்தரவு!

editor 2

இராணுவத்தின் பொறுப்பில் இருந்தவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். எனவே, இராணுவம் பதிலளிக்க வேண்டும் – அவர்களே பொறுப்பேற்க வேண்டும் – இவ்வாறு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவரான கந்தசாமி இளரங்கன் என்பவரை தேடி அவரின் தாயார் தொடுத்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் உத்தரவிட்டுள்ளார் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன்.

மேலும், எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான ஒரு திகதியில் வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவராகக் கூறப்படும் கந்தசாமி இளரங்கனை உயிருடன் முன்னிலைப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அவர் காணாமல் ஆக்கப்பட்டவராக கருதி அவருக்கு 10 இலட்சம் ரூபாயை நட்டஈடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தகவலை காணாமல் ஆக்கப்பட்டவர் சார்பில் வாதாடிய மூத்த சட்டத்தரணி கே. எஸ். ரத்தினவேல்தெரிவித்தார்.

கடந்த 2006 மே 5ஆம் திகதி கந்தசாமி இளரங்கன் (வயது 28) என்பவர் காணாமல் போனார் என்று அவரின் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

வாகன சாரதியான இவர், உமாதரன் என்பவரை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு ஏற்றிச் சென்ற போதே ஓமந்தை சோதனை சாடியில் தடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் காணாமல்போயிருந்தனர்.

உமாதரன் தொடர்பில் வழக்கு எதுவும் தொடுக்கப்படாத நிலையில், இளரங்கன் தொடர்பாக அவரின் தாயார் வவுனியா மேல்நீதிமன்றில் தொடுத்த ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை
நேற்று முன்தினம் நடந்தது. இதன் போதே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டிருந்தார்.

Share This Article