இந்தியாவின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 7 நாட்களாக றொபேர்ட் பயஸ் முன்னெடுத்த உண்ணாவிரத போராட்டம் அதிகாரிகளின் வாக்குறுதிக்கமைய நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட றொபேர்ட் பயஸ் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் தொடர்ந்தும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், றொபேர்ட் பயஸ் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அதனை உடனடியாக நிறை வேற்றுமாறு வலியுறுத்தி கடந்த 31 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்.
சிறப்பு முகாமிலிருந்து தன்னை விடுதலை செய்து விரும்பும் வெளிநாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், கடவுச்சீட்டு எடுப்பது தொடர்பாக தன்னை இலங்கை துணைத் தூதரகத்துக்கு அழைத்து செல்ல வேண்டும், சிறப்பு முகாமில் தங்களுக்கு மட்டும் தொடரும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான தனிமை சிறைவாசம் முடிவுக்கு வர வேண்டும் என்பனவே றொபேர்ட் பயஸின் கோரிக்கைகள்.
இந்த நிலையில் சிறப்பு முகாமுக்கு சென்ற வட்டார சிறப்பு துணை ஆட்சியர் மற்றும் துணை காவல் ஆணையர் ஆகியோர் நேரடியாக சிறப்பு முகாமுக்கு சென்று அவருடன் பேச்சு நடத்தினர்.
தன்போது, இலங்கை துணைத் தூதகரத்துக்கு அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து றொபேர்ட் பயஸ் தற்காலிகமாக தனது உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு வந்தது.