நடைமுறைக்கு வந்தது சர்ச்சைக்குரிய சட்டம்; உள்ளடக்கங்கள் வெளியாகின!

நடைமுறைக்கு வந்தது சர்ச்சைக்குரிய சட்டம்; உள்ளடக்கங்கள் வெளியாகின!

editor 2

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சமூக வலைத்தளங்கள், இணைய ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டம் நேற்று முதல் நடைமுறைக்குவந்தது. 

இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் திட்டமிட்டு மீறப்படுமிடத்தில் – குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட முடியும்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சபாநாயகர் மகிந்தயாப்பா அபேவர்த்தன நேற்று சான்றுரைப்படுத்தினார். இதன் மூலமே இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதேநேரம், நிகழ்நிலை பாதுகாப்புச்சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஓர் ஆணைக்குழு உருவாக்கப்படும். 

இந்த ஆணைகுழுவுக்கு நியமிக்கப்படும் ஐவர் குழுவின் பதவிக்காலம் மூன்று வருடமாக இருக்கும். இந்த சட்டமூலம் தொடர்பான விடயங்களை இந்த ஆணைக்குழுவே கையாளும். 

இந்த சட்டத்தின் கீழ், நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை பகிர்தல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வெளிப்படுத்துதல், கலகங்களை ஏற்படுத்துவதற்காக பொய்யான தகவல்களை பரப்புதல் – மக்களை தூண்டுதல், மத உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கத்துடன் போலி செய்திகளை பகிர்தல், ஆள் மாறாட்டம் மூலமான மோசடி, கலகம் ஏற்படுத்துதல் அல்லது அரசாங்கத்துக்கு எதிராக உள்நோக்கத்துடன் பொய்யான அறிவிப்புகளை பரப்புதல், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பணிப்புரையை மறுத்தல் போன்றவை குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்தக் குற்றங்கள் திட்டமிடப்பட்டு – உள்நோக்கத்துடன் செய்யப்பட்டவை என்று நிரூபணமாகும் பட்சத்தில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படமுடியும்.

இதேசமயம், இந்த சட்டமூலம் ஊடக சுதந்திரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான பயங்கர வாத தடைத்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் இட்டுள்ள அடித்தளம் என்று ஊடக, சிவில் அமைப்புகள் விமர்சித்துள்ளன. 

எனினும், இணையம் மூலம் இடம் பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை இந்தச் சட்டம் கட்படுத்தும் என்றும் ஒரு சாரார் வரவேற்றுள்ளனர். 

இதேநேரம், இந்த சட்டம் குறித்து உயர்நீதிமன்றம் செய்த 34 பரிந்துரைகளை அரசாங்கம் செய்யவில்லை என் றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This Article