இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த பிரயத்தனப்படும் சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 24 ம் திகதி முதல் உலகின் பிரபல சமூக ஊடக நிறுவனங்கள் இலங்கையுடனான ஒத்துழைப்பு மற்றும் தொடர்பாடல்களை துண்டிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் இலங்கை சமூக ஊடகங்கள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான தனது சொந்த சட்டபொறிமுறைகளை கொண்டிருக்கும்.
இதன் காரணமாக ஏற்கனவே நடைமுறையில் உள்ளபொறிமுறைகளை பயன்படுத்தவேண்டிய தேவையேற்படாது என தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக மெட்டா (Facebook) யூடியுப் (Youtube) கூகுள் (Google) போன்ற நிறுவனங்களும் ஆசிய இணைய கூட்டமைப்பின் ஏனைய நிறுவனங்களும் இலங்கை அரசாங்கத்தின் கட்டமைப்புகளுடனான தங்கள் விசேட தொடர்பாடல்கள் ஒத்துழைப்புகளை நிறுத்தலாம்.
இன்று சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த இரண்டாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது இதன் பின்னர் நாளை இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
ஆசிய இணைய கூட்டமைப்பு அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்யவேண்டும் இதனுடன் தொடர்புபட்டவர்களுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவேண்டும் என தொடர்ச்சியாகவேண்டுகோள் விடுத்துவந்துள்ளது.
கடந்த மாதம் ஊடக அமைச்சின் பிரதிநிதிகள் குழுவொன்று சிங்கப்பூர் சென்று ஆசிய இணைய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது எனினும் அவர்களின் பரிந்துரைகள் நிகழ்நிலை பாதுகாப்புசட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை.
ஜனவரிக்கு முன்னர் அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காண்பிப்பது குறிப்பிடத்தக்து.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை நிராகரித்திருந்த ஆசிய இணைய கூட்டமைப்பு தற்போதைய வடிவில் நிறைவேற்றப்பட்டால் இலங்கை அரசாங்கத்துடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படமுடியாது என தெரிவித்திருந்தது.
இதன்காரணமாக சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இலங்கை பொலிஸின் கணிணி குற்றப்பிரிவு சிஈஆர்டி தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றுடனான தொடர்புகளை துண்டிக்கலாம்.
இதன் காரணமாக சமூக ஊடகங்கள் மற்றும் கணிணி குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் பாதிக்கப்படலாம் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.