‘திருகோணமலையில் இன்று நடைபெறும் தமிழரசுக் கட்சித் தலைவர் தேர்தலில் இருந்து நான் ஒருபோதுமே விலகவில்லை. தேர்தலில் இருந்து நான் விலகுவதாக சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் பொய்யானவை. இன்றைய தேர்தலில் நான் நிச்சயம் வெற்றி பெற்று தலைவராவேன். என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சித் தேர்தலில் இருந்து ஒருவர் விலகுவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும் இறைமையைக் காப்பதற்கான இந்த அரசியல் பணியிலே நாங்கள் மூன்று பேர் போட்டியிடுகிறோம். தோல்விப் பயத்தால் ஒருவர் விலகுவதாக கூறப்படுவதால் அது என்னைப்பற்றியதல்ல.
ஏனெனில் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எங்கள் இனத்தின் விடுதலைக்காவும் அடுத்த சந்ததிக்கு எமது இன விடுதலையைக் கடத்திச் செல்வதற்காகவும் நடக்கும் இந்த தேர்தலில் நான் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.
எக்காரணம் கொண்டும் நான் இந்த தேர்தலில் இருந்து பின்வாங்கவும் இல்லை. விலகவும் இல்லை. – என்றார்.