மீனவர்கள் விவகாரத்தில் மோதல் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது – இலங்கைக்கு இந்தியா வலியுறுத்தல்!

மீனவர்கள் விவகாரத்தில் மோதல் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது - இலங்கைக்கு இந்தியா வலியுறுத்தல்!

editor 2

‘இந்திய மீனவர்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டு, மனித நேயத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், எந்தச் சூழ்நிலையிலும் மோதல் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.’ – இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்பரப்பில் தொடர் தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக வைகோ எழுப்பிய கேள்விக்கு வழங்கிய பதிலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அறிக்கை யில் கூறியதாவது:-

இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த உங்கள் கவலைகளை நான் முழுமையாகக் கவனத்தில் கொள்கிறேன்.

இந்திய ஒன்றிய அரசு, இந்திய மீனவர்களின் பாதுகாப்பு நலன் குறித்து அதிக அக்கறை எடுத்து
வந்துள்ளது என்பதை உங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருகிறேன். பிரதமர் உள்ளிட்ட குழு, இந்திய மீனவர்களின் பிரச்னைகள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் உயர்மட்ட அளவில் விவாதித்து இருக்கின்றது.

பேச்சுவார்த்தைகளில், இந்திய மீனவர்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டு, மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், எந்தச் சூழ்நிலையிலும் மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை உடனான கூட்டுப் பணிக் குழுவின் தொடர் பேச்சுவார்த்தைகளில், கைப்பற்றப்படும் மீன்பிடி படகுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அடுத்த கூட்டுப் பணிக் குழுவின் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. ஜனவரி 9ஆம் திகதி நிலவரப்படி, 13 இந்திய மீனவர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்திய அரசின் தொடர் முயற்சியால், 227 இந்திய மீனவர்களையும், 14 மீன்பிடி படகுகளையும் கடந்த 2023 ஆம் ஆண்டில் மீட்டுள்ளோம். மீதமுள்ளவர்களையும் விடுவிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரும், யாழ்ப்பாணத்தில் உள்ள துணை இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் சிறைக்காவலில் உள்ள இந்திய மீனவர்களை மீட்பதற்கான சட்ட
நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்என்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு
வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Share This Article