தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் – பேச்சுக்குத் தயார் என்று அறிவித்தது ஐக்கிய மக்கள் சக்தி!

editor 2

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஆலோசித்து வருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியானது, நாட்டின் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள தரப்பாகும். அதுமட்டுமன்றி, சிறுபான்மைக் கட்சிகளும் சிறிய கட்சிகளும் எம்முடன் தொடர்ச்சியாக ஐக்கிய கூட்டணியில் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

அதேநேரம், தமிழ் அரசியல் கட்சிகள் தமது சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கு முழுமையான உரித்தினைக் கொண்டிருக்கின்றன. அதில் நாம் மாற்றுக்கருத்தினைக் கொண்டிருக்கவில்லை.

இருப்பினும், அத்தரப்பினரையும் எம்முடன் இணைத்து எமது பரந்துபட்ட கூட்டணியில் பங்களிகளாக்குவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இன,மொழி,மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். 

ஆகவே, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எம்மிலிருந்து விலகி நிற்கும் நிலைமையை தவிர்ப்பதற்காக நாம் அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராகவே உள்ளோம். 

மேலும், நாட்டில் அனைத்து சமூகங்களுக்கும் சுபீட்சமான எதிர்காலம் ஒன்றை உருவாக்குவதாக இருந்தால் அனைவரும் ஒன்றிணைவது அவசியமாகும். அந்தச் செயற்பாட்டில் நாம் அனைவருடனும் கைகோர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். 

தெற்கில் மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதுபோன்று தான் வடக்கிலும் மக்கள் மாற்றத்தினை எதிர்பார்க்கின்றார்கள். அந்த மாற்றத்துக்கான தலைமையை ஐக்கிய மக்கள் சக்தி வழங்குவதற்கு தயாராகிவிட்டது. அதற்காக அனைவரது ஒத்துழைப்புக்களையும் பெறவுள்ளோம் என்றார்.

Share This Article