போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளில் 11 நாட்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி 858 மில்லியன் ரூபா அல்லது 85 கோடிக்கு மேல் எனவும், 558.5 மில்லியன் ரூபா அல்லது 55 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
குறித்த காலப் பகுதிகளில் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொதுமக்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு 10,798 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு கடந்த 11 நாட்களில் 11 கிலோ 600 கிராம் ஹெரோயின், 8 கிலோ ஐஸ், 297 கிலோ கஞ்சா மற்றும் 72,272 மாத்திரைகள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
முழு நடவடிக்கையிலும் இதுவரை 20,797 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 1,018 சந்தேக நபர்கள் தொடர்பான தடுப்பு உத்தரவுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அந்த சந்தேக நபர்களில் 1,298 போதைக்கு அடிமையானவர்கள் எனவும் அவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் விசேட பணியகம் பதிவு செய்த சந்தேக நபர்களின் பட்டியலில் 4,584 சந்தேக நபர்களில் 1,625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.