சட்டத்தரணிகள் தொடர்பில் இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த கருத்துத் தொடர்பில் அதிருப்தியடைவதாக கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று முன்தினம் கடிதமொன்றை அனுப்பிவைத்தே அவர்கள் இவ்வாறு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
அக் கடிதத்தில் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அவ்வாறான குற்றவாளிகள் சார்பில் முன்னிலையாவதற்கும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் கருத்து முன்வைப்பதற்கும் ஒத்துழைப்பை வழங்குவதற்கான உரிமை சட்டத்தரணிகளுக்கு இருக்கிறது.
ஊழல்வாதிகள் சார்பில் முன்னிலையாகும் ஒருசில சட்டத்தரணிகளே, தேசபந்து தென்னக்கோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பை வெளியிட்டதாக அமைச்சர் டிரான் கருத்து முன்வைத்திருந்தார்.
சட்டத்தரணிகள் தொழில் என்பது நாட்டில் நீதியை நிலைநாட்டுவதற்கும் நீதியின் உயரிய தன்மையைப் பாதுகாப்பதற்குமான துறையாகும்.
சட்டத்தரணிகளின் கெளரவத்தை பாதுகாக்க அமைச்சர் டிரான் அலஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களைப் பாதுகாப்பது இலங்கையில் உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் அரசியலமைப்பு உரிமை என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டியது அவசியமாகவுள்ளது.
இந்த உரிமை பொது பாதுகாப்பு அமைச்சர் உட்பட எந்தவொரு தனிநபரின் விருப்பு வெறுப்புக்கும் உட்பட்டதல்ல. இலங்கை மற்றும் பல ஜனநாயக நாடுகளின் சட்ட அமைப்பில் குற்றமற்றவர் என்ற அனுமானம் ஒரு அடிப்படைக் கோட்பாடாகும்.
சந்தேகத்துக்கு இடமின்றி குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொரு நபரும் நிரபராதியாக கருதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது நீதியின் அடிப்படையாகும்.
அரசியலமைப்பின் 13 ஆவது உறுப்புரை உரிய செயல்முறைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. நிரபராதி என்ற அனுமானம் ஒரு பாதுகாப்பாகவும் அநீதியான குற்றச்சாட்டுகளிலிருந்து தனிநபர்களைப் பாதுகாக்கவும் மற்றும் நியாயமான பாரபட்சமற்ற சட்ட செயல்முறையை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. இது குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றத்தை நிறுவப் போதுமான ஆதாரங்களை முன்வைக்க வேண்டியதன் மூலம், வழக்குத் தொடுநரின் மீது ஆதாரத்தின் சுமையை சுமத்துகிறது.
அத்தகைய சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டு நிரூபிக்கப்படும் வரை, குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியாகக் கருதப்படுவார் மற்றும் எந்தவிதமான பாரபட்சமும் காட்டப்படக் கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.