தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் – ஜனாதிபதி இன்று சந்திப்பு!

editor 2

வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இமாலய பிரகடனம் முன்வைக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுடன் இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பாக இது அமையவுள்ளது.

இதேவேளை, ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே, வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே தமது கருத்து எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article