புலம்பெயர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஒருவர் இனவாதியாகவோ இலங்கைக்கு எதிரானவராகவோ இருக்கப்போவதில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
புலம்பெயர்ந்தவர்களை இந்நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் இணைத்துக் கொண்டு, அவர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் அந்த முதலீடுகளை ஈர்ப்பதற்கான இடமாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டுமெனில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டியது அவசியமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற தேசிய குடிபெயர்ந்தோர் தின நிகழ்விலேயே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் லக்ஸ்மன் சமரநாயக்க சிறப்புரை ஆற்றியதோடு, அவர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த இலங்கையர்களுக்கான அலுவலகத்துடன் இணைந்து ஆற்றும் பணிகளைப் பாராட்டும் வகையில், சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரால் நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க.
”இன, மத பேதமின்றி வேறு நாடுகளில் வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் புலம்பெயர்ந்தவர்கள் என்ற வரையறைக்குள் அடங்குவர். கடந்த காலங்களில் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இடையில் வேறுபாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. நாட்டின் அபிவிருத்திக்கு அவர்கள் பங்களிப்புச் செய்ய விரும்புகின்ற போதும், அதிகாரத்துவ தடைகள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் சவால்கள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் விரிவான பொருளாதார செயற்பாடுகளுக்கு அமைவாக குடிபெயர்ந்த இலங்கையர்களுக்கான அலுவலகமான OOSLA இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விரிவான களமொன்றை உருவாக்க எதிர்பார்க்கிறது.
இரட்டை பிரஜாவுரிமை, கடவுச் சீட்டுக்களைப் புதுப்பித்தல் அவர்களின் தொடர்புகள் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளல், வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர்களுக்கு உதவுதல் என்பன மேற்படி அலுவலகத்தின் முதன்மை நோக்கங்களாகும். இலங்கையின் அபிவிருத்திக்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பிலேயே அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் முதலீடுகளை நாட்டிற்குள் ஈர்ப்பதற்கு, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய களமொன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்துகொண்டுள்ளோம்.
மக்கள் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி 2024 ஆம் ஆண்டு அல்லது 2025 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் குறைவடைந்து விரைவான அபிவிருத்தியை நோக்கி நகர முடியுமென எதிர்பார்க்கிறோம். அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் குறித்த புரிதலுடன் ஒத்துழைப்பு வழங்கினால் அந்த பணி கடினமானதாக அமையாது. அதற்கு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சிறந்த தொடர்பாடல் மிக அவசியமானது.” என்று சாகல ரத்னநாயக்க தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கான தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோரும் பங்குபற்றிய இந்நிகழ்வில் குடிபெயர்ந்த இலங்கையர்கள் பலரும் தொழில்நுட்பத்தின் வாயிலாக இணைந்துகொண்டமை விசேட அம்சமாகும்.