மருமகன் தாக்கியதில் மாமன் உயிரிழந்த சம்பவம் வடமராட்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
கரவெட்டி – வதிரி பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த நேசராசா அன்ரன் (வயது 50) என்பவரே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
கடந்த 9ஆம் திகதி, மரணமானவரின் வீட்டிலிருந்தவர்கள் உறவினரின் வீட்டில் இடம்பெற்ற விசேஷத்துக்காக கோண்டாவிலுக்கு சென்றுள்ளனர்.
மரணமானவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அச்சமயம், இவரின் மருமகன் (சகோதரியின் மகன்) மது போதையில் வந்து அவரைத் தாக்கியுள்ளார். இதில், காயமடைந்தவரை மீட்டு அயலவர்கள் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அன்றைய தினமே மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை உயிரிழந்தார்.
இதேசமயம், தாக்குதல் நடத்தியவர் சில தினங்களுக்கு முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.