திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்குவைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பெருந் தலைவர் இரா. சம்பந்தன் அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி ஒழுக்காற்று குழுவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் அந்தக் கட்சியின் மூலக் கிளைகள் மற்றும் தொகுதி, மாவட்டக்கிளைகள் புனரமைக்கப்படுகின்றன.
இந்நிலையில் திருகோணமலையில் நடைபெற்ற கட்சி புனரமைப்பின்போது சம்பந்தனின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பில் இரா.சம்பந்தனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையிலேயே, இந்த விடயம் குறித்து கட்சியின் ஒழுக்காற்றுக் குழு விசாரணைகளை நடத்தி உரிய தெளிவுபடுத்தல்களை செய்ய வேண்டும் என்றும் தவறுகள் இடம்பெற்றிருப்பது
உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீள் தெரிவு முன்னெடுக்கப்பட வேண்டும் – என்றும் கோரியுள்ளார்.