வட்டுக்கோட்டை இளைஞர் கொலை; பொலிஸாரை அடையாளம் காட்டினார் சாட்சி!

editor 2

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் இளைஞரின் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸாரை பிரதான சாட்சி நேற்று அடையாளம் காட்டினார்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட அடையாள அணி வகுப்பிலேயே இளைஞரை சித்திரவதை செய்தனர் என்று சந்தேகிக்கப்படும் நான்கு பொலிஸாரை பிரதான சாட்சி அடையாளம் காட்டினார்.

வழக்கு விசாரணையின்போது, ‘உயிரிழந்தவரை தாக்கினார் என்று கூறப்படும் பொலிஸாரின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இதனால், அடையாள அணிவகுப்பை நடத்தவேண்டாம்’ என்று சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

இந்த வாதத்தை நீதிவான் ஏற்க மறுத்து விட்டார்.

இதையடுத்து, அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அடையாள அணிவகுப்பின்போது, உயிரிழந்த இளைஞரை சித்திரவதைக்கு உள்ளாக்கினர் என்று கூறப்படும் நான்கு பொலிஸாரை பிரதான சாட்சி அடையாளம் காட்டினார்.

இதையடுத்து, நான்கு சந்தேகநபர்க ளையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ஏ. ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

குற்றச்சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தில் நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தடுப்புக் காவலில் வைத்து சித்திரவதைகளுக்கு உள்ளான இவர் கடந்த நவம்பர் 19ஆம் திகதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Share This Article