பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் கூறவேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதி அமைச்சர் தொடர்பில் கடந்த சனிக்கிழமை பாராளுமன்றில் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் இந்த நாட்டின் நீதி அமைச்ச ராக இருப்பதற்கு வெட்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் கூறுகின்றார். மட்டக்களப்பிலுள்ள விகாராதிபதி தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றார் நான் என்ன செய்வது என்று கூறினார்.
அவ்வாறான ஒருவரை கைது செய்ய நீதி அமைச்சருக்கு அதிகாரம் இருக்கின்றதா என நான் அவரிடம் கேட்டேன். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்யுமாறு தமிழ் டயஸ்போராக்கள் ஒப்பந்தம் ஒன்றை வழங்கியிருந்தார்கள்.
குறித்த ஒப்பந்தம் 20 இலட்சம் ரூபாய். வடக்கிலுள்ள ஐந்து இளைஞர்கள் அவரை கொலை செய்ய சென்றபோது எமது இராணுவமும் புலனாய்வு பிரிவும் சிறந்த முறையில் செயற் பட்டதன் காரணமாக அந்த கொலையை தவிர்க்க முடிந்தது.
அவரை காப்பாற்றிய பின்னர் அவரை கொலை செய்வதற்கு வந்த குறித்த 5 பேர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவரைக் கொலை செய்ய வருபவர்களுக்கு மாத்திரம் பயங்கவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், மற்றவர்களை கொலை செய்த கொலையாளிகளைப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து தண்டனை வழங்க வேண்டாம் என்று கூறுகின்றார்.
சுமந்திரன் அவர்களே நீங்கள் பயங்கர வாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவர் என் றால் உங்களை கொலை செய்ய வந்த ஐவரையும் விடுதலை செய்யுமாறு நீங்களே கூறுங்கள்-என்றார்