தமிழரசுக்கட்சியின் தலைமைப் பதவிக்கு சுமந்திரன், சிறீதரன் போட்டி!

editor 2

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சி. சிறீதரன், எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 2024 ஜனவரியில் நடைபெறவுள்ளது.

இதன்போது புதிய தலைவர் தெரிவு இடம்பெறும் ஜனவரி 20ஆம் திகதி மத்திய செயல் குழு கூடி புதிய தலைவரை தெரிவு செய்யவுள்ளது.

அன்றைய தினம், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டு, தலைவரை ஏகமனதாக தெரிவு செய்ய முடியாமல் போனால், 21ஆம் திகதி பொதுக்குழு கூட்டத்தில் தலைவரை தெரிவு செய்வது என்றும் 28ஆம் திகதி புதிய தலைவர் உரையாற்றுவார் எனவும் அந்தக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில், கடந்த நவம்பர் 5ஆம் திகதி வவுனியாவில் நடந்த கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சி. சிறீதரன், எம். ஏ. சுமந்திரன் ஆகிய இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

கட்சியின் செயலாளரிடம் இருவரும் தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர். சிறீதரன் கடந்த செவ்வாய்க்கிழமையும், எம். ஏ. சுமந்திரன் நேற்று முன்தினம் புதன்கிழமையும் வேட்பு
மனுக்களை தாக்கல் செய்தனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் வரலாற்றில் தலைமை பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வரலாறில்லை.

இதுவரை ஏகமனதாகவே தலைவர் தெரிவு செய்யப்பட்டு வந்தார். ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் களத்தில் இருந்தால், அவர்களில் ஒருவருக்கு விட்டுக்கொடுத்து ஏனையவர்கள் ஒதுங்கிக்கொள்ளும் அரசியல் பாரம்பரியத்தை தமிழரசு கட்சி பேணி வந்தது. எனினும், அந்த வழக்கம் இம்முறை இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகின்றது

Share This Article