இலங்கையின் ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் ஐ.நா அறிக்கை வெளியிட்டது!

editor 2

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் உத்தேச நிகழ்நிலை காப்பு
சட்டமூலம் என்பன தொடர்பில் அதீத கவனம் செலுத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் மூவரால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இரு சட்டமூலங்களும் சர்வதேச தரங்கள் மற்றும் சட்டத்திற்கு இணங்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான விசேட பிரதிநிதி ஐரின் கான், அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் மற்றும் செயல்படுதலுக்கான உரிமைகளை பாதுகாப்பதற்கான விசேட பிரதிநிதி கிளமண்ட் வோலே மற்றும் தனியார் உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி அனா பிராயன் ஆகியோரால்
இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பிலான உலகளாவிய பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தினால் பாதுகாக்கப்பட்ட தனிநபருக்கான உரிமைகள், கருத்து வெளியிடுவதற்கு காணப்படும் உரிமை மற்றும் அமைதியாக ஒன்றுகூடுதலுக்கான உரிமை என்பன இந்த இரண்டு சட்டமூலங்களாலும் மீறப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட இரு உலகளாவிய பிரகடனங்களிலும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாக ஐ. நா. விசேட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனங்களின் மூலம் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை நிறைவேற்றவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உத்தேச சட்டமூலங்களின் ஊடாக நிகழ்நிலையில் கருத்து வெளியிடுவதற் கான உரிமை மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், கடுமையாக அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிவில் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக தடைகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படக்கூடும் என ஐ.நா. விசேட பிரதிநிதிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் அனைத்து தரப்பினர் மற்றும் புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து இந்த சடடமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை வெவ்வேறு துறைகளை சேர்ந்தோர் கருத்து வெளியிடுவதற்கு காணப்படும் உரிமை மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்திற்கமைய ஆணைக்குழுவை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், அரசாங்கம் தொடர்பில் பக்கசார்பற்ற முறையில் செயற்படும் ஊடக நிறுவனங்களை தண்டிக்கவோ அல்லது உரிமத்தை இரத்து செய்யவோ
நாட்டின் நிர்வாக அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்குமென ஐ.நா. விசேட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த கண்காணிப்பு செயல்பாடு சுதந்திரமான மற்றும் அழுத்தங்களுக்கு உட்படாத அமைப்பாக இருக்க வேண்டும் எனவும் அதில் அரசியல் தொடர்புகள் இருக்கக்கூடாது எனவும் அவர்கள் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த இரு சட்டமூலங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிந்த பின்னர் முறையாக மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஐ. நா. விசேட பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Share This Article