2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலிய அணி.
இந்தியாவின் அஹமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி, களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பில் அதிகபடியாக, கே.எல். ராகுல் 66 ஓட்டங்களையும், விராட் கோலி 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 55 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில்4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்து உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
அவுஸ்திரேலிய அணிசார்பில் அதிகபடியாக, டிராவிஸ் ஹெட் 137 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், மார்னஸ் லாபுசாக்னே 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 11ஆவது அரைச்சதம் இதுவாகும்.
பந்துவீச்சில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 43 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி 6ஆவது முறையாகவும் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் அவுஸ்திரேலியா அணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.