முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பின் நகர் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்குக்குக் காரணமாக புதுக்குயிருப்பின் நகர் பகுதி, சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை மற்றும் பெருமளவான வர்த்தக நிலையங்கள் வீடுகள் என்பவற்றினுள் நீர் புகுந்தமையால் இன்றைய நாள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுக்குடியிருப்பில் இன்று ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புத் தொடர்பில் நடந்தது என்ன என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசினோம்,
பெயர் குறிப்பிடவிரும்பாத அவர்கள் எமக்குத் தெரிவிக்கையில்,
வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களம் என்பன தமது வீதிகளுக்கான கழிவுக் கால்வாய்களை உரிய வகையில் துப்புரவு செய்யாமையே இன்று நீர் தேங்கி நின்றதற்காக பிரதான காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை,
கழிவுக் கால்வாய்களுக்குள் மக்கள் குப்பைகளைக் கொட்டுகின்ற செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்திருக்கின்றன.
இதனிடையே,
நீர் வெளியேற வேண்டிய பகுதிகளில் உள்ள பள்ளமான காணிகளைச் சுற்றி மதில்கள், வீடுகள், கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள அதேவேளை அந்தக் கட்டுமானங்களைச் சூழ மண், கற்களால் நிலம் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறான கட்டுமானங்களை அமைப்பதற்கு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் என்பன அனுமதி வழங்கியுள்ளன.
இவ்வாறான கட்டுமானங்களுக்கான இறுதி அனுமதி கொடுக்கும் அதிகாரம் பிரதேச சபைக்கே உள்ளது. பிரதேச சபையானது இவ்வாறான கட்டட அனுமதி தொடர்பில் பிரதேச செயலகத்திடம் கோரிக்கை முன்வைக்கும்.
அந்தக் கோரிக்கையில் இயற்கையான வடிகால் உட்பட்ட முக்கியவிடயங்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். பிரதேச செயலகம் அவ்வாறான சிக்கல்கள் இல்லை என்று அறிக்கையிடுவதை அடிப்படையாகக் கொண்டு பிரதேச சபை அனுமதிக் கடிதத்தைக் கையளிப்பது என்பதே வழமையான நடைமுறையாகும்.
நில அளவைத் திணைக்களத்தினால் பிரதேசம் தொடர்பில் வழங்கப்படுகின்ற வரைபடத்தினை அடிப்படையாகக் கொண்டே பிரதேச செயலகம் பிரதேச சபை விடுக்கின்ற கோரிக்கை கடிதத்திற்கு அனுமதி வழங்கிவருவது வழக்கம்.
இருந்தபோதிலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நில அளவைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள வரைபடத்தில் இயற்கையாக நீர் வழிந்தோடும் பெருமளவான இடங்கள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இதன் பின்னணியில் நிலத் தோற்றம் தொடர்பிலான போதிய அறிவின்மையே அதிகாரிகள் குறித்த பகுதிகளில் கட்டுமானங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருப்பதற்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றுக்கான உடனடித் தீர்வாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தமக்குச் சொந்தமான வீதிகளின் கழிவு வாய்க்கால்களையும் வீதி அபிவிருத்தித் திணைக்களம் தமக்குச் சொந்தமான கழிவு வாய்க்கால்களையும் தொடர்ந்தும் துப்பரவு செய்து ஏனைய முக்கியமான பிரதேசங்களில் பராமரிப்பது போன்று பராமரிக்க வேண்டும்.
புதுக்குடியிருப்பிலிருந்து இரணைப்பாலைவரையான பிரதான மற்றும் சிறு வீதிகளின் கழிவு வாய்க்கால்கள் இவ்வாறு பராமரிக்கப்படவேண்டும்.
அதேவேளை,
புதுக்குடியிருப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளிலிருந்து வாய்க்கால்களில் குப்பைகளை வீசுவதைத் தவிர்க்க வேண்டும்.
பிரதேச சபையும் சில பகுதிகளில் கூடுதல் அக்கறை செலுத்தி குப்பைகளை கிரமமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேவேளை, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு பிரதேச சபை சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது கட்டடங்களுக்கான அனுமதி உட்பட்ட மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
புதுக்குடியிருப்பின் மையப்பகுதிக்கு வருகின்ற நீர் குளத்து நீர் என்பதை விட காடுகளிலிருந்து வெளியேறும் நீர் என்பதால் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு கூடுதல் வெள்ளம் வருவதற்கான சாத்தியப்பாடுகள் கூடுதலாகக் காணப்படுகின்றன.
இந்தவிடயங்களை இறுக்கமாக கைக்கொள்வதன் மூலமே எதிர்காலத்திலும் வெள்ளப்பாதிப்பிலிருந்து புதுக்குடியிருப்பை மீட்கமுடியும் என்பதுடன் மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.