ஒரு இலட்சம் ரூபா செலவிட்டால் “நாட்டிய திலகம்” விருது! யாழில் வழங்கிய புலம்பெயர் அமைப்பு!

editor 2

புலம்பெயர் தளத்தில் செயற்படும் அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்து நடனத்துறையினர் 15 வரையானோருக்கு “நாட்டிய திலகம்” என்ற விருது வழங்கியிருந்தமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தின் இலங்கை வேந்தன் கல்லூரியில் இரண்டு நாட்கள், ஒவ்வொருவரும் தலா ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில் ஆற்றுகைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் பரத ஆற்றுகை செய்த அனைவருக்கும் “நாட்டிய திலகம்” விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரிடமும் முதலில் அனுமதிக்கட்டணமாக ஐம்பதாயிரம் ரூபா செலுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் எவரும் அக்கறை செலுத்தாமையினால் பின்னர் அந்தத் தொகை பத்தாயிரம் ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.

புலம்பெயர் அமைப்பு என்று சொல்லப்பட்டபோதிலும், 

பங்கேற்ற ஒவ்வொருவரும் தமது ஆடைகள், பக்கவாத்தியங்களுக்கான செலவீனம், போக்குவரத்து, நிகழ்வின் பார்வையாளர்களுக்கான சிற்றுண்டிச் செலவு என சராசரியாக ஒரு இலட்சம் ரூபாய் செலவிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதேவேளை,

பங்கேற்பதற்கான அடிப்படைத் தகுதியாக வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சைகளில் தரம் ஐந்து வரை நிறைவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இருந்தபோதிலும்,

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றாத சில மாணவிகளும் குறித்த நிகழ்வில் ஆற்றுகை செய்து “நாட்டிய திலகம்” விருது பெற்றிருக்கின்றார்கள்.

அதேவேளை,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நடனத்துறையின் விரிவுரையாளர்கள் சிலரும் ஆற்றுகைசெய்து “நாட்டியத் திலகம்” விருது பெற்றிருக்கிறார்கள்.

ஆற்றுகையாளர்களை மதிப்பீடு செய்வதற்காக என பிரபல பரதக் கலைஞர்கள் சிலர் அரங்கின் முன்பாக அமர்ந்திருந்தபோதிலும்,

மதிப்பீட்டின் அடிப்படையில் விருது வழங்கப்பட்டிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

மதிப்பீட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் ஜனவரி மாதமளவில் கூடுதல் புள்ளிபெற்றவர்களுக்கு தகுதி அடிப்படையில் மேலும் சில விருதுகள் வழங்கப்படும் என்று தமக்கு வாக்குறுதி வழங்கப்பட்டதாக நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்களில் சிலர் எமக்குத் தெரிவித்தனர்.

புலம்பெயர் தளத்திலிருந்து பிரபல அமைப்பு ஒன்று யாழ்ப்பாணம் வந்து கலைஞர்கள் ஒவ்வொருவரையும் ஒரு இலட்சம் ரூபா செலவு செய்ய வைத்து, அவர்களின் பணத்திலேயே நிகழ்வினை நடத்தி ஒரு மணி நேரத்தில் அவர்களுக்கு விருது கொடுத்திருப்பது உள்ளூர் கலைஞர்கள் மத்தியில் கவலையைத் தோற்றுவித்துள்ளது.

குறித்த புலம்பெயர் அமைப்பு பரதக்கலை மீது அக்கறை கொண்டு செயற்பட்டதாக இருந்திருந்தால்,

போட்டியினை வைத்து அவற்றின் அடிப்படையில் விருதுகளை வழங்கியிருக்கலாம். ஆனால் யாரோ வளர்த்தவர்களை, அவர்களின் பணத்தினை செலவிடவைத்து அவர்களுக்கு அந்தப் பணத்திலேயே விருது வழங்கியிருப்பது ஆரோக்கியமானது அல்ல என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

குறிப்பு DIPLOMA IN PERFORMANCE EXAMINATION என்ற சாராம்சத்துடன் நடைபெற்ற ஆற்றுகை ஒரு மணி நேரம் நடைபெற்றிருந்த நிலையில் அதற்கு சான்றிதழ் (DIPLOMA) வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article