மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் அத்துமீறி குடியேறியவர்களை உடனடியாக வெளியேறுமாறு நீதிமன்று உத்தரவு!

editor 2

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை பகுதியான மயிலத்தமடு மாதவனை பகுதி அரசகாணியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை உடனடியாக வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாத் இன்று உத்தரவிட்டார்.

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள குறித்த அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் வெளியேறாத நிலையில், அவர்களுக்கு எதிராக மகாவலி அதிகார சபையின் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில், அந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி யுத்தத்திற்கு முன்னர் 12 சிங்கள குடும்பங்கள் குடியேறி வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார்.

சட்டவிரோத குடியேற்ற வாசிகள் அந்த பகுதியில் வாழ்ந்ததற்கான சட்டரீதியான ஆவணங்களை கடந்த 10ஆம் திகதி வழங்குமாறு நீதவான் கால அவகாசம் வழங்கிய நிலையில், அவர்கள் அதற்கான ஆதாரத்தை வழங்காத நிலையில் இன்று 13 ஆம் திகதி குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாத் தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு பண்ணையாளர்கள் இன்று 60 நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article