இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியை துடுப்பெடுத்தாட விடாது பந்துவீச்சை தேர்வு செய்யுமாறு ஆலோசனை வழங்கியது முன்னாள் வீரர் மஹேல ஜயவர்த்தனவே என பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ஸ குற்றம் சுமத்தினார்.
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் எழுந்த சர்ச்சையின்
போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
சர்வதேச கிரிக்கெட் பேரவையை இயக்குவது இந்தியாதான். அவர்களது ஆதிக்கம் தான் இங்கு நிலவுகிறது. சர்வதேச கிரிக்கெட்பேரவை மாத்திரமல்ல இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டு சபையை இயக்குவதும் இந்தியாதான். அவர்களது ஆலோசனையின் பிரகாரம்தான் இங்கு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
இந்தியாவுடனான போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணிதான் வெற்றிபெற்றது.
ஆனால், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றாலும் துடுப்பெடுத்தாட வேண்டாம், பந்துவீச்சை தெரிவுசெய்யுமாறு மஹேல ஜயவர்தனவே அணியின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர்மீது எனக்கு எவ்வித தனிப்பட்ட கோபங்களும் இல்லை. ஆனால், இவ்வாறு ஏன் அவர் ஆலோசனை வழங்க வேண்டும்?.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்தால் நாம் முதலில் துடுப்பெடுத்தாடும் தீர்மானத்தைதான் எடுத்திருப்போம் என இந்திய அணி யின் வீரர்களே கூறியிருந்தனர். இலங்கையின் தீர்மானம் குறித்து புதுமையடைந்ததாகவும் கூறியிருந்தனர்.
உலகக் கிண்ண தொடரின் ஆரம்ப நிகழ்வு கூட இந்திய – பாகிஸ்தான் அணிகள் விளையாடும்போதுதான் நடத்தப்பட்டது. இந்தியா இங்கு கிரிக்கெட்டில் பாரிய ஆதிக்கத்தை
செலுத்துகிறது.
பிரச்னை கிரிக்கெட் நிர்வாக சபையில் மாத்திரமல்ல. இது அதற்கு அப்பாலான பிரச்னை. முழுமையான கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
கிரிக்கெட் சபையில் உள்ள ஊழல் – மோசடிகளை கண்டறிய தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும். அர்ஜூன ரண துங்கவால் மாத்திரம் இதனை கட்டியெழுப்ப முடியாது. துறைசார்ந்த நிபுணர்களை நியமிக்க வேண்டும். முதலில் கிரிக்கெட் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.