சனத்தொகை, வீட்டுக் கணக்கெடுப்பு தொடங்கியது!

editor 2

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமானது.

அதன்படி, இந்த சனத் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டது. அத்துடன், தரவு சேகரிப்பிற்கு வழமையாக பயன்படுத்தும் அச்சிடப்பட்ட ஆவணங்களுக்கு மேலதிகமாக நவீன தொழில்நுட்பத்துடன் டெப் கணினிகள் மற்றும் இணையம் என்பன பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், புவி- இடம்சார்ந்த தொழில்நுட்பங்களாக, கணினி உதவி தனிநபர் நேர்காணலும் (CAPI- Computer Assisted Personal Interviewing) மேற்கொள்ளப்படுவது விசேட அம்சமாகும்.

இலங்கையின் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருவதோடு 2012 ஆம் ஆண்டு இறுதிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இலங்கையில் சட்ட ரீதியாக முதலாவது குடிசன கணக்கெடுப்பு 1871 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் திகதி நடத்தப்பட்டது. இது தெற்காசிய நாடுகளில் நடத்தப்பட்ட முதல் விஞ்ஞானபூர்வமான கணக்கெடுப்பாகும்.

தேசியக் கொள்கைத் தயாரிப்பிற்கும் திட்டங்களை வகுப்பதற்கும், பொது நிர்வாகம், அதன் புவியியல் ரீதியான பரம்பல், இனப் பரவல் மற்றும் மக்கள் தொகை, அவற்றில் உள்ள பல்வேறு சமூக பண்புகள் உள்ளடங்கும் வகையில் பிரதான தரவுகள் திரப்படுவதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவும் உள்ளடங்களாக இந்த பிரதான தரவுகள் திரடப்படுகின்றன.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இலங்கையில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் பூகோள அமைவிட இலக்கமொன்று (GPS) வழங்கல், கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட (Digitized) வரைபடம் வழங்கல் என்பனவும் இந்த கணக்கெடுப்புடன் மேற்கொள்ளப்படும்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் டபிள்யூ. ஏ. சரத்குமார், கொழும்பு மாவட்ட செயலாளர் கே. ஜி. விஜேசிறி, குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.ஏ.பி. அனுரகுமார உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Article