மீண்டும் அதிகரிக்கிறது மின் கட்டணம்?

editor 2

நாட்டில் மின்சார கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின், ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் மின்சார சபையின் உத்தேச வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியை நிர்வகிப்பதற்கு மின்கட்டணங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமானது என இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை 22 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த தரவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதால், மின்கட்டணத்தை மீள மதிப்பிடுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் இலங்கை மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.

இதன்படி, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் இதற்கான பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை, இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் மற்றும் உள்ளுர் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு செலுத்துவதற்காக அரச வங்கியொன்றிலிருந்து 32சதவீத வட்டி விகிதத்தில் பெறப்பட்ட மேலதிகப்பற்றுக்காக ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 51 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை, வெளிதரப்பினருக்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் அசல் கொடுப்பனவுகளின் தொகை 4 இலட்சத்து 21 ஆயிரம் 818 மில்லியன் ரூபாவாகும் என மின்சார சபையினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article