தாய்லாந்தில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 63 இலங்கையர்களிடம் மோசடி செய்த குற்றச்சாட்டில் சீனப் பிரஜை ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த சீனப் பிரஜை வெளிநாடு செல்லும் இலங்கையர்களை சமூக வலைத்தள கணக்குகள் மூலம் ஏமாற்றியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் வாடிக்கையாளர் சேவைத் துறைகளில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 2 இலட்சம் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் 63 இலங்கையர்களை சுற்றுலா விசாவில் தாய்லாந்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மாதாந்தம் ஆயிரம் அமெரிக்க டொலர் வேதனம் தருவதாகக் கூறப்பட்டு இந்தக் குழு தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்லாந்து சென்ற குழுவினர் பின்னர் மியன்மார் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள கட்டிடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் உள்ள செல்வந்தர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் வங்கிக் கணக்குத் தகவல்களைப் பெறவும், பெண்களை போல போலியான சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி இலங்கையர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 63 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்த மூன்று இலங்கையர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டிலுள்ள பிரதான சந்தேகநபரான சீன பிரஜை நேற்று முன்தினம் குடிவரவு திணைக்களத்திற்கு பிரவேசித்த போது கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சீன பிரஜை மனித கடத்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.