இலங்கை ரயில்வேத் திணைக்களம் கடந்த எட்டு வருடங்களில் 297.64 பில்லியன் ரூபாயை செலவிட்டு இருப்பினும் 52.19 பில்லியன் ரூபாயை மாத்திரமே வருமானமாக ஈட்டியுள்ளதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கடந்த 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை ரயில்வே திணைக்களத்துக்கு 245.45 பில்லியன் ரூபாய் நாட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, கடந்த 2021ஆம் ஆண்டு ரயில்வே திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட மொத்த செலவினம் 40.41 பில்லியன் ரூபாயாக காணப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் செலவினம் 42.53 பில்லியன் ரூபாயாக காணப்பட்டுள்ளது.
அதாவது ஒரு வருடகாலப்பகுதிக்குள் 2.12 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த எட்டு ஆண்டுகளில் இலங்கை ரயில்வே திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற வருமானத்துடன் ஒப்பிடும் போது, மொத்த செலவினமானது வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது எனவும் கணக்கு தகவல்களை ஆலோசிக்கும் போது இது தெளிவாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.