கடந்த வருடம் ஜனாதிபதி மாளிகையில் பணம் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணை குறித்து முறையாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் 9ஆம் திகதி, மக்கள் போராட்டம் இடம்பெற்ற வேளையில், ஜனாதிபதி மாளிகையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையிலிருந்து ஒருகோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மீட்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, ஊழல் அல்லது சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை என கையூட்டல் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மன்றுரைத்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்போது, சில விடயங்களை மாத்திரம் குறிப்பிடும் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டாம் என, அந்த ஆணைக்குழுவுக்கு அறிவித்த நீதவான், பொறுப்பான நிறுவனம் என்ற வகையில் நீதிமன்றில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உத்தியோகபூர்வ அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தப் பணத்துக்கு உரிமை கோருவதால், பணச் சலவைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை நடத்த முடியுமா என சட்டமா அதிபரிடம் கோரியுள்ளதாகவும், இதுவரையில் அதற்கான அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.