இலங்கையின் கல்விக் கொள்கையில் புதிய மாற்றம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
போட்டித் தன்மைகொண்ட கல்வி முறையொன்று இருக்கும் வரையில் நல்லொழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொழிற்பயிற்சிக் கல்வி நாட்டின் தற்போதைய தேவை எனவும், பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் அந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
“இந்த நாட்டின் கல்வி, உயர் தரத்தில் உள்ளது. ஆனால், அவற்றில் நம் பிள்ளைகள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
இன்றிருக்கும் போட்டித் தன்மையான கல்வி முறை, குழந்தைகளின் திறன், அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தை வளர்க்க பயிற்றுவிப்பதில்லை. தற்போது மனனம் செய்யும் வெறுமனே அறிவை மாத்திரம் வழங்கும் ஒரு கல்வி முறையே உள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பிரிசில் பரீட்சை, ஆரம்பத்திலேயே ஒரு போட்டித் தன்மையை ஏற்படுத்துகின்றது. இந்தப் போட்டியால் குழந்தைகளிடையே வெறுப்பும், விரக்தியும் எழுகின்றது.
பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்றாலும், மறுபுறம் மானிடப் பண்புகளில் வளர்ச்சி ஏற்படுவதில்லை. மேலும், சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளிலும் போட்டி நிலவுகின்றது.
போட்டித் தன்மையைக் கொண்ட கல்வி முறை இருக்கும் வரை, நாட்டிற்காக ஒரு தன்னலமற்ற சமூகத்தை உருவாக்குவது கடினம்.
உலகில் வளர்ந்த நாடுகளில் உள்ள கல்வி முறையைப் பார்த்தால் சாதாரண தரம் போன்ற பரீட்சைகள் நடைபெறுகின்றன.
ஆனால் புள்ளி வழங்கும் முறை இல்லை. ஒவ்வொரு பிள்ளையையும் சித்தி அடையச் செய்வதுடன், குறைந்த புள்ளிகளைக் கொண்ட பிள்ளைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுகிறது.
சிறந்தக் கல்வியைக் கொண்ட நாடாகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ள பின்லாந்தில் 1970 இல் நம் நாட்டில் இருந்த அதே கல்வி முறையே உள்ளது.
பிள்ளைகளுக்கு ஓய்வுடன் கூடிய மனநிலை இருக்கவில்லை என்றால், அறிவைப் புரிந்துகொள்வது கடினம். பல நாடுகளில் பிரத்தியேக தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதில்லை.
ஆனால் அவர்கள் கல்வி நிலையில் வெற்றிகரமாக உள்ளனர். போட்டியின் பின்னர் பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்கும் பெரும்பாலான மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் காரணங்களுக்காக, பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமையை முன்பள்ளி மேம்பாட்டுக்கும் வழங்க வேண்டும் என்று நாம் பரிந்துரைத்துள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.