பொறுப்புக்கூறலை முற்றாக நிராகரிக்கிறோம் – ஐ.நாவில் இலங்கை!

editor 2

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஐ. நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலிசுபாசினி அருணதிலக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வின் ஆரம்பத்தில் நேற்று இலங்கையின் நிலைப்பாட்டை முன்னிறுத்தி உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டத்தை சந்தேகத்துக்குரிய ஆணை என வர்ணித்துள்ள அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறல் திட்டத்துக்கு வழிவகுத்த இரண்டு 46/1, 51/1 தீர்மானங்களையும் முற்று முழுதாக நிராகரித்துள்ளது என்பதை நான் ஆரம்பத்திலேயே தெரிவிக்க விரும்புகின்றேன். எழுத்துமூல அறிக்கைகளையும் முடிவுகளையும் – பரிந்துரைகளையும் நாங்கள் நிராகரிக்கின்றோம்.

இந்தத் தீர்மானங்களின் காணப்படும் உள்ளடக்கங்களை ஏற்றுக்கொள்ளாததால் பல நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன அல்லது அதில் வாக்களிப்பதைத் தவிர்த்தன என்பதை நாங்கள் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

குறிப்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளமை முன்னொரு போதும் இடம்பெறாத விடயம்.

இது மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் பேரவைக்கு வழங்கிய ஆணைக்கு அப்பால் செல்கின்றது என்பதை இலங்கை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது. இந்த தீர்மானங்கள்உள்விவகாரங்களில் தலையிடுபவை சமூகங்களை துருவமயப்படுத்துபவை.

மேலும் இந்த தீர்மானங்களை மனிதஉரிமைகளுக்கு அப்பால்பட்ட காரணங்களுக்காகவும் தங்களின் உள்நாட்டு அரசிய லுக்காகவும் ஒரு சில நாடுகள் பின்பற்றுகின்றன. இந்தத் தீர்மானத்தின் நிதி சார்ந்த தாக்கங்கள் குறித்து பலநாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இதுபேரவை யினதும் உறுப்பு நாடுகளினதும் வளங் கள் மீது பயனற்ற விதத்தில் செலவுகளை உருவாக்கக்கூடியது என்பதை இலங்கை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கை இதற்கு ஒத்துழைப்பு வழங்காது. எனினும், பலதரப்பு கட்டமைப்பில் ஆக்கபூர்வமாக பங்கெடுக்கின்ற நாடு என்ற அடிப்படையிலும் சர்வதேச சமூகத்துடனான எங்களின் ஆழமான ஈடுபாட்டை கருத்தில்கொண்டும். இலங்கை பேரவையின் ஏனைய பொறிமுறைகளுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை தொடர்ந்தும் பேணும் – என்றும் கூறினார்.

Share This Article