சாத்தியம் இல்லாதவற்றைக் கேட்டு வற்புறுத்தாதீர்கள்! – தமிழ் அரசியல்வாதிகளிடம் பிரசன்ன வேண்டுகோள்!

editor 2

“தமிழ் அரசியல்வாதிகள் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தீர்வை வென்றெடுக்க முயல வேண்டும். அதைவிடுத்து நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விடயங்களைக் கோருவதில் எந்தப் பயனும் இல்லை.” – இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“13ஆவது திருத்தச் சட்டம் அரசமைப்பில் காணப்படுகின்றது. ஆகவே, அது பற்றிய விடயங்களை முன்னெடுக்கும்போது எதிர்ப்புக்களை வெளியிடுவது பொருத்தமல்ல.

அத்துடன், அந்தத் திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையிலான திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளன.

அவ்வாறான நிலையில் வடக்கு அரசியல்வாதிகள் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விடயங்களைக் கோருவதில் எந்தப் பயனும் இல்லை.

மேலும் அவர்கள் தொடர்ச்சியாக விடுக்கும் கோரிக்கையானது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு வழிசமைக்காது. மாறாக, அவை தொடர்ச்சியாக நீடித்துச் செல்லவே வழிசமைப்பதாக இருக்கும்.

அதேபோன்று தென்னிலங்கையில் வாக்கு வங்கிகளுக்காகக் கடும்போக்காளர்களாக தம்மைக் காண்பித்து, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களும் தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தைக் குழப்பிவிடக்கூடாது.

வடக்கு மக்களுக்கும், தெற்கு மக்களுக்கும் தற்போது வரையில் முழுமையான இரு தரப்பு நம்பிக்கை ஏற்படுத்தப்படாமல் துருவப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான நிலைமையையே முதலில் மாற்ற வேண்டும். அதற்காக ஜனாதிபதி முதற்கட்டமாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

அதன் அடிப்படையில், இரு இன மக்களுக்கும் இடையில் புரிதலும் நம்பிக்கையும் ஏற்பட்டு நல்லிணக்கம் உருவாகின்ற தருணத்தில் மேலதிகமான விடயங்களைப் பேச்சுகள் ஊடாகத் தீர்த்துக்கொள்ள முடியும்.

இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், அரசியல் தரப்பில் உள்ளவர்கள் தமது நலன்களுக்காக அதி உச்சமான விடயங்களை விவாதித்துக்கொண்டிருப்பதானது சந்தர்ப்பத்தையும் காலத்தையும் வீணடிப்பதாகவே இருக்கும்.” – என்றார்.

Share This Article