ஹோமாகம – இரசாயனத் தொழிற்சாலைத் தீப்பரவல்; அவசர எச்சரிக்கை!

editor 2

தீ விபத்துக்குள்ளான ஹோமாகம – கட்டுவன கைத்தொழில் வலயத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையை சூழவுள்ள ஏனைய தொழிற்சாலைகளில் உள்ளவர்களை, அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் அது தொடர்பான சுகாதார திணைக்களங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு 8.30 அளவில் குறித்த தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டது.

இந்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் கோட்டே, தெஹிவளை – கல்கிசை மாநகர சபைகளினதும் ஹொரணை தீயணைப்பு பிரிவினரதும் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இதுதுவிர, பனாகொடை இராணுவ முகாம் உத்தியோகத்தர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து 3 மணித்தியாலங்களாக முன்னெடுத்த நடவடிக்கைகளின் பயனாக தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீ விபத்துக்குள்ளான ஹோமாகம – கட்டுவன பிரதேசத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இன்றைய தினம் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இதேவேளை, குறித்த இரசாயன தொழிற்சாலையானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share This Article