2010 ஆம் ஆண்டுக்குப் பின் வட- கிழக்கில் 83 விகாரைகள் கட்டப்பட்டுள்ளன!

editor 2

2010ஆம் ஆண்டுக்குப்பின் வடக்கு-கிழக்கில் 83 இடங்களில் விகாரையைக் கட்டியுள்ளனர். உண்மையைச் சொன்ன வரலாற்றாசிரியர்களை புறக்கணித்து பொய்களைப் புனைந்து பொய்களுக்கூடாக இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை பூர்வீகக் குடிகள் இல்லை என்பதை வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றுசுழிபுரத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

தமிழர்கள் வாழும் இடங்களைச் சிங்கள மயப்படுத்துவதற்காக ஆரம்பத்தில் யுத்தத்தின் மூலமாக தமிழர்களை அழித்து நிலங்களைப் பறித்து இங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

யுத்தத்தில் இனப்படுகொலையை செய்தார்கள் என சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர்.

இந்த நேரத்தில் வடக்கு-கிழக்கிலுள்ள சைவ சமய அடையாளங்களை பௌத்த அடையாளங்களாக நிலைநிறுத்தி சிங்கள பௌத்த நாடு என நிரூபிக்க நினைக்கின்றனர்.
அந்த முயற்சியின் ஒரு கட்டமாக பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் சங்கமித்தை காலத்தில் நடப்பட்டதாகப் புனைந்து செய்தியைப் பரப்பு கின்றனர். அதற்கெதிரான போராட்டமாகவே இது இடம்பெறுகின்றது.

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு-கிழக்கில் 83 இடங்களில் விகாரையைக் கட்டியுள்ளனர்.

தற்பொழுதும் இந்த இடத்தில் பௌத்தம் இருந்ததாக கூறி சிங்கள பௌத்தமாக அடையாளப்படுத்த முனைகின்றார்கள்.

இங்கு தமிழ் பௌத்தம் இருந்ததற்கான அடையாளங்கள் உண்டு.
விஜயன் இலங்கைக்கு வர முன்னரே இலங்கையில் பஞ்ச ஈச்சரங்கள் காணப்பட்டன. வரலாற்று வழியாக சிவனை வழிபடும் நாடாக இருந்ததால்தான் திருமூலர் சிவபூமி என இந்த நாட்டை வர்ணித்துள்ளார்.

உண்மையைச் சொன்ன வரலாற்றாசிரியர்களை புறக்கணித்து பொய்களைப் புனைந்து பொய்களுக்கூடாக இந்நாட்டிலுள்ள தமிழ் மக்களை பூர்வீகக்குடிகள் இல்லை என்பதை வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இந்த ஆலயத்தில் 1768 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உறுதியில் எந்தவிதமான அரசமரமும் இருந்ததாக இல்லை.

இதை சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்வதற்கும் இது தொடர்பான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முழு முயற்சிகளை மேற்கொள்வோம்-என்றார்.

Share This Article