தமிழ் ஒலிபரப்பு உலகில் ஒரு முன்னணியாளராக இருந்தவரே விமல் சொக்கநாதன் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“விமல் சொக்கநாதனின் மறைவு என்னைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது. என்ன அவசரமோ? யார் அழைத்தார்களோ? போயே போய் விட்டார்.
விமல் ஒரு பன்முக ஆளுமை. தமிழ் ஒலிபரப்பு உலகில் ஒரு முன்னணியாளராக இருந்தவர். பல நிகழ்ச்சிகளைத் தயாரித்தும், அதில் பங்கேற்றும் தனது குரல் வளத்தின் மூலம் அதற்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தவர்.
எமது தந்தை வீ. பி. கணேசனின் புதிய காற்று திரைப்படத்திலும் பங்கேற்று நடிப்பு துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார் விமல்.
தனது தொழில்சர் சட்டத்தரணிப் பணிக்காக லண்டன் சென்ற பிறகும், அவருக்கு வானொலி மீதிருந்த அளப்பரிய பற்று குறையவில்லை. பி.பி.சி. தமிழோசையில் அவர் செய்தி வாசிப்பாளராகப் பல தசாப்தங்கள் பணியாற்றினார்.
தனது குரலின் ஏற்ற இறக்கங்கள், உச்சரிப்பு, மொழிபெயர்ப்பில் எளிமையான நடை ஆகியவை மூலம் அவரது ஆளுமை மேலும் விரிவடைந்து பிரமலமானார்.
எழுத்துலகிலும் காலடி பதித்திருந்த அவர் வீரகேசரி இதழிற்கு வாரம் ஒரு கட்டுரையை எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பு ‘லண்டனிலிருந்து விமல்’ என்ற தலைப்பில் அண்மையில் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் வெளியானது.
கொழும்பு வெளியீட்டில் பிரதம அதிதியாகப் பங்கேற்று அந்நூல் குறித்து பேசியது எனது மனதில் இன்றளவும் பசுமையாக உள்ளது. அவரது உடல் நிலையில் தளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தாலும், உள்ளத்தளவில் உற்சாகத்தில் சிறிதும் குறைவில்லாமல் இருப்பதை அந்நூல் வெளியீட்டு விழாவில் நான் அவதானித்தேன்.
இன்றைய இளைய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள், எழுத்தாளர்களுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாகவும், முன்னோடியாகவும், தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் உள்ளார் என்பது மறுக்க முடியாதது.
ரயில் விபத்தில் அவர் அகால மரணமடைந்தது என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எம்மிடையே குடும்ப ரீதியாக நல்லுறவும் இருந்தது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் நேயர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், அவருக்கு எனது அஞ்சலியையும் செலுத்துகின்றேன்.” – என்றுள்ளது.