தீவுகள் முழுவதையும் ஓர் அதிகார சபைக்குள்ளே கொண்டு வந்து, அவற்றின் அனைத்து நிர்வாக பணிகளையும் கொழும்பால் (மத்திய அரசு) நேரடியாக ஆட்சி செய்யப்படும் முறையில் சட்ட வடிவமொன்று தயாரிக்கப்பட்டு, அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட தயார் நிலையில் இருக்கிறது. – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
அத்துடன், தீவகத்துக்கான இந்த அதிகாரக்கட்டமைப்பு என்பது மகாவலி அதிகார சபைத்திட்டத்தையும்விட மிக மோசமான வகையில் தமிழர்களின் தலை விதியை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய உத்தேச சட்ட வரைவாக அமைந்துள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நேற்றைய தினம் கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைமைப் பணிமனையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் இந்த சந்திப்பில் அவர் மேலும்தெரிவித்த முக்கிய அம்சங்கள் வருமாறு,
‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முண்டு கொடுத்து வெள்ளையடிக்கும் வேலையை தமிழ்த் தேசியக்கூட்ட மைப்பினருடன் நீதியரசர் விக்னேஸ்வரனும் செய்து வருகின்றார். 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக இரண்டு சுற்றுப்பேச்சுகள் முடிவடைந்திருக்கின்ற நிலையில் ஜனாதிபதி பணிமனையிலிருந்து மூன்றாவது சுற்று பேச்சுக்காக எமக்கு மீண்டும் அழைப்பு வந்துள்ளது.
‘நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமான பேச்சு என்று சர்வதேசமட்டத்தில் காட்டிக் கொண்டு, அதே நேரம் தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கு எந்தவித தொடர்பும் இல்லாத ஒற்றையாட்சிக்குள் இருக்கக்கூடிய ஒரு கட்டமைப்பு அடிப்படையில் அரசமைப்பில் இருக்கின்ற 13 ஆவது திருத்தம் தொடர்பாகப் பேச அழைத்துள்ளனர்.
இது மீண்டும் மீண்டும் வடக்கு, கிழக்குவாழ் தமிழர்களை முட்டாளாக்கும் வேலை மட்டுமல்ல, தமிழர்களை ரணில் விக்கிரமசிங்க மதிக்கத் தயாரில்லை அல்லது கணக்கெடுக்கத் தயாரில்லை என்பதையும் காட்டுகின்ற ஒரு செயலாகத்தான் இருக்கின்றது.
‘குட்டக் குட்டக் குனிபவனும் மடையன், குனியக் குனியக் குட்டு பவனும் மடையன்’ – என்பது போல இதைத் தெரிந்து கொண்டு பேச்சுகளில் கலந்து கொள்கின்ற தமிழ்த் தரப்புகள் தமிழ் மக்களுக்குப் பேரம் பேசக்கூடிய வாய்ப்புகளை முற்றிலும் இல்லாமலாக்கி, ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்கு – அதுவும் சிங்கள மக்களே ஏற்றுக் கொள்ளாத அல்லது அங்கீகரிக்காத ஓர் ஆட்சிக்கு – முண்டுகொடுக்கின்ற ஒரு செயலாக மட்டும்தான் இது அமைகிறது.
இதில், ரணில் விக்கிரமசிங்கவின் உண்மையான – ஒரு மோசமான – முகத்தை வெளிக் கொண்டுவரக்கூடிய விடயம் இன்றைக்கு, இன்னும் அம்பலமாகியிருக்கின்றது. ஒரு பக்கம் ஏதோ பெயரில் அதிகாரப் பகிர்வு என்றும், 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தச் சொல்லியும் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.இதேநேரம், இந்த அரசாங்கம் தீவகம் முழுவதையும் ஓர் அதிகார சபைக்குள்ளே கொண்டு வந்து அவற்றின் அனைத்து நிர்வாக பணிகளையும் கொழும்பால் நேரடியாக ஆட்சி செய்கின்ற ஒரு சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படத் தயாராக உள்ளது.
இந்த சட்ட வரைவைத் தயாரிப்பது குறித்து ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு கடைசியாக வந்தபோது ஒரு சில புத்திஜீவிகளை அழைத்து பேசப்பட்டிருக்கின்றது. ஆகவே, தீவகத்துக்கான அந்த அதிகாரக் கட்டமைப்பு என்பது மகாவலி அதிகார சபை அபிவிருத்தி திட்டத்தையும்விட மிக மோசமான வகையில் தமிழர்களின் தலை விதியை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய வகையில் கொழும்பால் மட்டும் நிர்ணயிக்கின்ற ஓர் அதிகார சபையாகத்தான் அமைந்திருக்கின்றது.
இது மிகமிக மோசமானது. ஆனால்,தமிழ் தரப்புககளுக்கு இது நன்றாகத்தெரியும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே இந்த விசயம் தெரியவருகிறதென்றால் இன்றைக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு முண்டு கொடுக்கிறஇந்தத் தரப்புகளுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், தங்களை ஏதோ தேசியவாதிகள் என்று காட்டிக்கொண்டு இந்த பேச்சில் கலந்து கொண்டுள்ள தமிழரசு கட்சி, புளொட், ரெலோ மற்றும் விக்னேஸ்வரன் போன்ற தரப்பு களும் நன்றாகத் தெரிந்து கொண்டுதான் படுமோசமான இந்தச் செயல்பாடுகளை மூடி மறைத்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ் மக்கள் மட்டத்தில் வெள்ளையடித்து கொண்டிருக்கின்றனர்.
ஆட்சியாளர்கள் தீவக நிலப்பரப்பை மத்திக்குள் கொண்டு சென்று அதைநிரந்தரமாகக் கைப்பற்றினால் நாங்கள் தீவகத்தை இழக்க வேண்டிய நிலைமை உருவாகும் எனத் தெரிந்து கொண்டு இந்தத் தரப்புகள் ஆட்சியாளர்களுக்கு துணை போகின்றன.
ஏற்கனவே தீவகத்தில் மக்கள் வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு நிலைமைய உருவாக்கி- படிப்படியாக மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலைமைதான் இருக்கிறது. இந்தச் சந்தரப்பத்தைப் பயன்படுத்தி அங்கு சனத்தொகையை முற்றிலும் இல்லாமல் செய்து சுற்றுலா போன்ற விடயங்களைக் காட்டி சிங்களயமாக்கும் வேலைத் திட்டம்தான் இதற்குப் பின்னால் இருக்கிறது.
தீவக நிலப்பரப்புகள் முழுக்க முழுக்ககேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.ஏனென்றால், இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் முக்கியமானவையாக இருக்கக்கூடிய பிரதேசங்கள். அது முற்று முழுதாக சிங்களத் தரப்பிடம் தான் இருக்க வேண்டும்.
அது தமிழர் கையில் இருக்கக்கூடாது என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது.
இந்தப் பிண்ணயில்தான் ஒன்றுமே இல்லாத 13 ஆம் திருத்தம் குறித்து இவர்கள் பேசி வருகின்றனர். 13 ஆம் திருத்தத்துக்குள் பேச்சை முடக்கி தமிழ் மக்களுக்கு ஏதோ கொடுக்கப் போவ தாக பொய் காட்டப்படுகிறது. ஆனால்,உண்மையில் நடக்கும் விடயம் இந்த அரசாங்கத்துக்கு வெள்ளையடித்து அரசாங்கம் சிங்கள மயமாக்கும் வேலைகளுக்கு அத்திபாரம் போடுகின்ற செயற்படுகளுக்கு துணை போகிற நிலைமைதான் நடக்கிறது.
சமஷ்டிக்காகத்தான் இருக்கிறோம் என்று வாக்கைப் பெற்றவர்கள் -தீர்வைப் பற்றி கதைக்க வேண்டிய இந்த நேரத்தில் அந்த சமஷ்டியை பற்றி உச்சரிக்காமலே ஒற்றையாட்சிக்குள்ளேதமிழ் அரசியலை முடக்க இங்கேயும் நடவடிக்கை எடுக்கின்றனர்.
ஆகவே, இரண்டு பகுதிக்கும் நடக்கிற இந்தமோசமான செயல்களுக்கு விடையாக பாராளுமன்றத் தேர்தல் மட்டும்தான்அமையும் – என்றும் கூறினார்.