வடக்கும் கிழக்கும் நாளை முடங்கும்! – பல தரப்புக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

editor 2

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை (28) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு பல தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

நாளை முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரையில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரண்டு கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல மனிதப் புதைகுழிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருந்தபோதும், அவை தொடர்பாக இதுவரை அரசுகள் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. பூசி மெழுகப்பட்டு அவற்றின் விசாரணைகள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ள நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்திலும் அதுவே நடக்கும் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த விசாரணைகள் சரியான முறையில் நடக்க வேண்டும் என்றும், அகழ்வுப் பணிகளில் சர்வதேசக் கண்காணிப்பு அவசியம் என்றும் தமிழ் மக்கள் வலியுறுத்துகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்படப் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வர்த்தக சங்கங்களும், போக்குவரத்துச் சங்கங்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கும் அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க செயலாளர் கலாரஞ்சினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொள்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை மேற்கொண்ட குழாய் பொருத்துவதற்கான அகழ்வு நடவடிக்கைகளில் மனித எலும்பு எச்சங்களும், ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அதையடுத்து நீதிமன்ற அனுமதி பெற்று கடந்த 6ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வு நடவடிக்கைகளில் 13 மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த அகழ்வு நடவடிக்கையைத் தொடர்வதற்கான மேலதிக நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அகழ்வு நடவடிக்கைகளில் தொல்லியல் திணைக்களமும் உள்வாங்கப்படும் என்று தெரியவருகின்றது.

Share This Article