வடக்கு – கிழக்கு தமிழ்த் தலைவர்களைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர்!

editor 2

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் இன்று ஒரே மேசையில் சந்தித்துப் பேசியுள்ளார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்.

இது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் தனது ருவிட்டர் பதிவில்,

“தமிழ்த் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டதில் பெருமையடைகின்றேன்.

உண்மை, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்காக இலங்கை பாடுபடுவதால் அதிகாரப் பகிர்வு, காணிகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கான பதில்களைக் கண்டறிதல், பாரிய புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் பற்றி இதன்போது விவாதிக்கப்பட்டது.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியின் பேச்சாளரும் வெளிவிவகார விடயங்களைக் கையாள்பவருமான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share This Article