எடுத்ததற்கெல்லாம்  சர்வதேச விசாரணையா? – தமிழ் அரசியல்வாதிகள் மீது கமல் குணரத்ன பாய்ச்சல்

editor 2

“எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணை, சர்வதேச கண்காணிப்பை கேட்பது சிறுபிள்ளைத்தனமானது. அவ்வாறு செய்யாதீர்கள்” – என்று தமிழ் அரசியல்வாதிகளை கோரியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன.

கொக்கிளாய் மனிதப் புதைகுழி விவகாரம், இது தொடர்பில் சர்வதேச விசாரணை கண்காணிப்பு அவசியம் என்று தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“வன்னிப் பிரதேசம் யுத்தம் நடந்த பூமி. இங்கு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே அது தோண்டப்பட்டு – விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சம்பவங்கள் நடக்கும் இடங்களில் அரச புலனாய்வாளர்களின் பிரசன்னம் இருக்கும். இதனைத் தவிர்க்க முடியாது. அது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற உத்தரவில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ் அரசியல்வாதிகள் எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணை, சர்வதேச கண்காணிப்பு என்று கோருவது சிறுபிள்ளைத்தனமானது.

உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதற்கான பணிகள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நடைபெறும்.” – என்றார்.

Share This Article