ரணிலுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு!

editor 2

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று  (11) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துக்  கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொண்டு, இரு நாட்டு மக்களுக்கும் பலனளிக்கும் வகையில் சமூக மற்றும் பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்வது தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக அரசு முன்னெடுத்துவரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இந்திய வெளியுறவுச் செயலாளருக்குத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு, இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

அதேபோல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்ததோடு, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவையும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா சந்தித்துக் கலந்துரையாடினார்.

Share This Article