ரணில் குறித்து பேசாதீர்கள்! – ‘மொட்டு’க்கு மஹிந்த வாய்ப்பூட்டு

editor 2

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்தோ அல்லது அறிவிக்கப்படாத ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்தோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கருத்துக்கள் எதையும் தெரிவிக்கக்கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரு அணிகளாகப் பிரிந்துள்ளது. அதில் ஒரு தரப்பு ரணிலுக்கு ஆதரவாகவும், மற்றைய அணி அவருக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றதே. இது தொடர்பில் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?’ என்று மஹிந்த ராஜபக்சவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்தபோதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பிலேயே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அவருக்கும் – அவர் தலைமையிலான அரசுக்கும் பொதுஜன பெரமுனவே ஆதரவளித்து வருகின்றது.

எனவே, அவர் தொடர்பாகவோ அல்லது அரசு தொடர்பாகவோ எந்தவிதமான கருத்துக்களையும் பொதுஜன பெரமுவினர் தெரிவிப்பதை நிறுத்த வேண்டும்.

அறிவிக்கப்படாத ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கருத்துக்களை வெளியிடுவது பிரயோசனமற்றது. ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன்தான் ஜனாதிபதிப் பதவியைப் பெற்றார். இப்போதும் பெரமுனவின் ஆதரவுடன்தான் அந்தப் பதவியை அவர் வகிக்கின்றார். அவரின் பதவிக்காலம் நிறைவடையும் வரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவருக்கு ஆதரவளிக்கும். அதன் பின்னர், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிந்தித்து முடிவு எடுப்போம்.” – என்றார்.

Share This Article