புத்தூரில் இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்கிய ஊரவர்கள்!

editor 2

தமது ஊர் பெண்களின் படங்களை ஆபாசமாகச் சித்தரித்து சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் எனக் கூறி இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்த ஊரவர்கள் இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையால் பொலிஸார் வான் நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

புத்தூர் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

புத்தூர் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெண்களின் படங்கள் கணினி வரைகலை (கிராஃபிக்ஸ்) மூலம் ஆபாசப் படங்களாக மாற்றம் செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊரவர்கள் இணைந்து முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு ஊரில் உள்ள இரு இளைஞர்களே அவ்வாறு பெண்களின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர் எனக் குற்றம் சாட்டி , அந்த இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்த ஊரவர்கள் இளைஞர்கள் மீது மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் வீட்டினுள் இருந்த பெறுமதியான பொருட்களை அடித்து உடைத்தும், வீட்டின் முன் நின்ற வாகனங்களை அடித்து உடைத்தும் அவற்றுக்குத் தீ வைத்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அச்சுவேலி பொலிஸார், தாக்குதலில் காயமடைந்த இளைஞர்களை அங்கிருந்து மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முயன்ற போது , பொலிஸாருடன் ஊரவர்கள் முரண்பட்டதுடன் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதில் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் , நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் வான் நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

அதையடுத்து அங்கு கூடியிருந்த ஊரவர்களை அவ்விடத்தில் இருந்து அகற்றி விட்டு, காயமடைந்த இரு இளைஞர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆகியோரை மீட்ட பொலிஸார், அவர்களைச் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article